நகராட்சி மேம்பாட்டு பயிலரங்க கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசிக் கொண்டிருந்த போது, அலுவலர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவரை கண்டித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டம் 2022 மற்றும் விதிகள் 2023 தொடர்பாக, அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் இயக்குநர்களுக்கான பயிலரங்கினை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு, அரசாங்கத்தை நல்ல வழியில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நகராட்சி துறைக்கு முக்கியமானதாக உள்ளது. நகராட்சி செயல் அலுவலர்கள் தைரியமாக தப்பு நடந்தால் தட்டி கேட்கலாம். நாங்கள் நிச்சயம் உங்களுடன் இருப்போம்.
யாருக்கும் எந்த சிறு பாதிப்பும் இல்லாத வகையில் ஊதிய உயர்வு கண்டிப்பாக செய்து தருவோம். நிர்வாகத்திலே சிறு தவறு நடந்தாலும் நிங்கள் தான் பொறுப்பு. 490 பேரூராட்சி அலுவலர்களைச் சந்திக்க வேண்டும் என்று தான் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் உங்களுக்கு பிரச்னை நடந்தால் அரசாங்கம் சரியாக செயல்பட முடியாது. அவர்கள் 5 வருடத்திற்கு பிறகு மாறி விடுவார்கள். ஆனால் நீங்கள் நிரந்தரமாக உள்ளவர்கள். நகராட்சி நிர்வாக துறை மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்க வேண்டும்.
முன்பு பேரூராட்சிக்கு ரூ.1 லட்சம் ஒதுக்கினால் பெரிது .ஆனால் தற்போது அப்படி இல்லை. முதல்வர் பேரூராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சிகளுக்கு ரூ.10 லட்சம் வரையில் ஒதுக்குகிறார். முதல்வர் அதிக தொகையை துறைக்கு ஒதுக்கி உள்ளார். அவ்வளவு பெரிய பொறுப்புள்ள துறை. பெரிய பெரிய நிறுவனங்கள் வரி கட்டுவதில்லை. ஆனால் சிறிய வீட்டில் உள்ளவர்களைத் தொந்தரவு செய்ய கூடாது. பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
பயிலரங்க கூட்டத்தில் அமைச்சர் பேசி கே.என்.நேரு கொண்டிருந்த போது, அலுவலர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அப்போது அமைச்சர், “அங்க ஒருத்தர் தூங்குறாரு…. எழுப்புங்க அவர…. இங்கயே தூங்குற நீங்க, ஊர்ல போய் என்ன பண்ணபோறீங்க. எந்த ஊர் நீங்க? தேவையில்லாம ஊருக்கு கெட்ட பேரு” என கண்டித்து அமர வைத்தார்.








