இந்தியாவில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 1,098 நீதிபதிகள் பதவியில் உள்ளனர். இதில் 83 பேர் மட்டுமே பெண் நீதிபதிகளாக உள்ளனர் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை தொடர்பாகவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பெண் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான மத்திய அரசின் முடிவு குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமன பிரிவு 124 மற்றும் 217, இந்திய அரசியலமைப்பு சட்டம் 224-ன் கீழ் நீதிபதிகள் நியமனத்தில் சாதி அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.
அதே நேரத்தில் நீதிபதிகளுக்கான நியமன முன்மொழிவுகள் அனுப்பப்படும்போது பன்முகத் தன்மையை உறுதி செய்யும் வகையில் தாழ்த்தப்பட்ட,பழங்குடி பிரிவினர், சிறுபான்மை பிரிவினர் என அனைத்து பிரிவினரின் விண்ணப்பங்களையும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் உரிய முறையில் பரிசீலனை செய்து வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், தரவுகளின்படி இந்தியாவில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 1,098 நீதிபதிகள் பதவியில் உள்ளனர். இதில் 83 பேர் மட்டுமே பெண் நீதிபதிகளாக உள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் அதிக எண்ணிக்கையில் பெண் நீதிபதிகள் பதவியில் உள்ளதாகவும் மத்திய சட்டத்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







