ஒடிசா ரயில் விபத்து : மூன்று ரயில்வே ஊழியர்களை கைது செய்த சிபிஐ..!!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மூன்று ரயில்வே ஊழியர்களை சிபிஐ கைது செய்துள்ளது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு…

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மூன்று ரயில்வே ஊழியர்களை சிபிஐ கைது செய்துள்ளது.

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 290 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்து கட்டாக் நகரில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பிஜெய் பஸ்வான் என்பவர் சிகிச்சை பலனின்றி ஜூன் 13-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் பிகாரைச் சேர்ந்த பிரகாஷ் ராம் என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் கட்டாக்கின் எஸ்சிபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 290 ஆக உயர்ந்தது.

இந்த சம்பவம்  நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.  இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், ரயில்வே செக்ஷன் பொறியாளர்கள் அருண் குமார் மொஹந்தா, முகமது ஆமீர் கான் மற்றும் டெக்னீசியன் பப்பு குமார் ஆகிய 3 ரயில்வே ஊழியர்களை சிபிஐ கைது செய்துள்ளது. குற்றத்துக்கான ஆதாரங்களை அழித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த  கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.