நூபுர் சர்மாவின் நாக்கை அறுப்பவர்களுக்கு பரிசு அறிவித்தவர் கைது

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நூபுர் சர்மாவின் நாக்கை அறுப்பவர்களுக்கு பரிசு தருவதாக அறிவித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.   நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதாக கூறி பாஜக…

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நூபுர் சர்மாவின் நாக்கை அறுப்பவர்களுக்கு பரிசு தருவதாக அறிவித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதாக கூறி பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் இனைத்து விசாரிக்க உத்தரவிடுமாறு அவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

 

ஆனால் அவரது கோரிக்கை மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் நூபுர் சர்மாவை கடுமையாக விமர்சித்துள்ளது. அவரது உளறல் பேச்சு ஒட்டுமொத்த நாட்டிற்கும் தீ வைத்து விட்டதாகவும், நாட்டில் தற்போது நிகழும் நிகழ்வுகளுக்கு அவர் மட்டுமே பொறுப்பு என்றும் சாடியது.

இதனிடையே, நூபுர் சர்மாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நூபுர் சர்மாவின் நாக்கை அறுப்பவர்களுக்கு 2 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்று வெளியானது.

 

இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, பரிசு அறிவித்த ஹரியானாவை சேர்ந்த இர்ஷாத் பிரதான் என்பவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், கைது செய்யப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 

– இரா.நம்பிராஜன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.