“பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா” திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டருக்கான மானியமாக மாதம் 200 ரூபாய் தமிழகத்தை சேர்ந்த 36 லட்சம் பயனாளிகளுக்கு வரவு வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டு முதல் தமிழகத்தில் “பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா” திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு மானியம் நிறுத்தப்பட்ட பயனாளர்களின் எண்ணிக்கை? இதன் காரணமாக மத்திய அரசுக்கு எஞ்சிய தொகை எவ்வளவு? 2022-23 நிதியாண்டில் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எவ்வளவு பேர் மானியம் பெற போகிறார்கள் என மக்களவையில் உறுப்பினர் முகமது அப்துல்லா எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் ராமேஸ்வரர் தெலி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், DPTL (Direct Benefit Transfer for LPG) எனும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 28.68 கோடி பயனாளர்கள் உள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 2.1 கோடி பயனாளர்கள் உள்ளதாகவும், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 2022 ஆகஸ்ட் 1ம் தேதி வரை 9.44 கோடி பயனாளிகள் நாடு முழுவதும் உள்ளதாகவும், தமிழகத்தை பொறுத்தவரை 36 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கொள்கையின்படி 14.2 கிலோ கொள்ளளவு கொண்ட உள்நாட்டு சிலிண்டருக்கு (ஆண்டுக்கு 12) மாதம் 200 ரூபாய் மானியம் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







