பாரதிராஜா மறைவு – அரசியல் மற்றும் திரைத்துறையினர் இரங்கல்…!

பாரதிராஜாவின் மறைவிற்கு அரசியல் மற்றும் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். மருத்துவ சிகிச்சை பெறு வந்த பாரதிராஜா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நள்ளிரவு 2 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 84.

பாரதிராஜாவின் மறைவிற்கு அரசியல் மற்றும் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர்: தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியாலும், கிராமப்புற வாழ்வின் ஆழமான சித்தரிப்பாலும் தமிழ் சினிமாவை மாற்றியமைத்த ஒரு உண்மையான முன்னோடியான, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். அவரது திரைப்படங்கள் மண்ணின் ஆன்மாவையும், மனித உணர்வுகளின் செழுமையையும் ஈடு இணையற்ற நம்பகத்தன்மையுடன் பிரதிபலித்தன. அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும்.

முதலமைச்சர் விஜய் : இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் : தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி : தென் தமிழகத்தின் கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்; திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்; தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் திரு. பாரதிராஜா அவர்கள். அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் : பிரபல ஜாம்பவான் திரைப்பட இயக்குநரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஸ்ரீ பாரதிராஜா அவர்களின் மறைவுச் செய்தி இந்தியத் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ஸ்ரீ பாரதிராஜா அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி.

நடிகர் கௌண்டமணி : பதினாறு வயதினிலே படம் தொடங்கி சிவப்பு ரோஜாக்கள், கல்லுக்குள் ஈரம், புதிய வார்ப்புகள் என இயக்குனர் பாரதிராஜா இயக்கிய பல படங்களில் நான் நடித்துள்ளேன். 16 வயதினிலே படத்தில் எனக்கு முகவரி கொடுத்தவர் பாரதிராஜா. அவர் மாபெரும் கலைஞர் அவர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

நடிகர் ராமராஜன் : எக்காலமும் போற்றும் உயிரோடு ஒன்றிய திரைக்காவியம் படைத்த எங்கள் இயக்குனர் இமயத்திற்கு கண்ணீர் அஞ்சலி!

நடிகர் பார்த்திபன் : இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் சினிமா என்றால் அதற்கடுத்த வார்த்தை பாரதிராஜா. அல்லது சினிமாவுக்கு இணையான வார்த்தை பாரதிராஜா தான் . அதனால் தான் சிவசங்கர் “சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்வதற்கு பதிலாக பாரதிராஜா வாய்ப்பளிப்பார் என்று அவரையும் அறியாமல் சொன்னார்.

தயாரிப்பாளர் எஸ் தாணு : கிராமத்து “மண் வாசனையை” உலகம் நுகர செய்த “தமிழ்கலம்” படைப்புத் தொழிலில் “தமிழ் பிரம்மன்” தமிழனின் “மண்வாசனை” எப்பொழுதும் தமிழ்திரையின் “கிழக்குச்சீமை”விடியல் எல்லோரும் செலுத்தும் “முதல் மரியாதை” சுவாசம் மறக்கலாம் நீ தந்த வாசம் மறக்காது அஞ்சலிகள்

நடிகர் விஷால் : நமது மாபெரும் புகழ்பெற்ற இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சார் இன்று காலை நம்மையெல்லாம் விட்டுப்பிரிந்து காலமானார் என்ற அதிர்ச்சியான மற்றும் சோகமான செய்தியைக் கேட்டு மனமுடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தில் அவரது மனைவி, மகள் ஜனனி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இறைவன் மனவலிமையைத் தரட்டும்.

நடிகர் ராகவா லாரன்ஸ் : புகழ்பெற்ற இயக்குநரான பாரதிராஜா அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு என் மனம் கனத்துப்போனது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். எளிய வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டும் மிகச்சிறந்த திரைப்படங்களை உருவாக்க முடியும் என்று நம்பும் ஒவ்வொரு கதைசொல்லியின் மூலமாகவும் அவரது கலைப்பயணம் தொடர்ந்து நிலைத்திருக்கும். தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.