5 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன மூக்கு வளையம் தொலைத்தவரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் துளையிடும் ஆர்வலராக இருப்பவர் 35 வயதான ஜோயி லிகின்ஸ். இவர், கடுமையான இருமல் ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்து, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் ஜோயி லிகின்ஸ் நுரையீரலில் மூக்கு வளையம் ஒன்று சிக்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவர்கள், எக்ஸ்ரேவை ஜோயி லிகின்ஸிடம் காண்பித்து, இது என்னவென்று தெரிகிறதா? என்று கேட்க, இதைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன் என்று அவர் பதிலளித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜோயி லிகின்ஸ் தொலைத்த மூக்கு வளையம்தான் அவரது நுரையீரலில் சிக்கியிருந்தது. இது குறித்து ஜோயி லிகின்ஸ் கூறுகையில், “நான் எனது மூக்கு வளையத்தை தொலைத்தபோது, அதை விழுங்கிவிட்டதாக நினைத்தேன். எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன். எனது படுக்கையையே புரட்டிப் போட்டேன்” என்றார்.
ஜோயி லிகின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தொடக்கத்தில் மருத்துவர்கள் அவருக்கு நிமோனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று எண்ணினர். அவரது நுரையீரலில் 0.6 அங்குல மூக்கு வளையம் இருக்கும் எக்ஸ்ரே அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதிர்ஷ்டவசமாக அந்த வளையம் ஜோயி லிகின்ஸின் நுரையீரலைத் துளைக்காததால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.
தற்போது கிடைத்திருக்கும் இந்த மூக்கு வளையத்தை நினைவுப் பரிசாக வைத்துக் கொள்ளப்போவதாகவும், மீண்டும் அதனை அணியப்போவதில்லை என்றும் ஜோயி லிகின்ஸ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் இணையவாசிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
- ஜெனி









