“பாசிசத்தை வீழ்த்த ஒன்றிணைந்துள்ள கூட்டணியில் எவராலும் பிளவை ஏற்படுத்த முடியாது” – திமுக பவளவிழாவில் முதலமைச்சர் #MKStalin பேச்சு!

திமுக கூட்டணியில் எப்போதும், எவராலும் பிளவை ஏற்படுத்த முடியாது எனவும், பாசிசத்தை வீழ்த்தவே ஒன்றிணைந்துள்ளதாகவும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக பவளவிழாவில் தெரிவித்துள்ளார். திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, காஞ்சிபுரத்தில்…

"No one can create a split in the united alliance to defeat fascism" - Chief Minister #MKStalin's speech at DMK coral festival!

திமுக கூட்டணியில் எப்போதும், எவராலும் பிளவை ஏற்படுத்த முடியாது எனவும், பாசிசத்தை வீழ்த்தவே ஒன்றிணைந்துள்ளதாகவும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக பவளவிழாவில் தெரிவித்துள்ளார்.

திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, காஞ்சிபுரத்தில் திமுகவின் பவள விழா பொதுக்கூட்டம் இன்று (செப். 28) நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, கூட்டணி கட்சி தலைவர்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அந்த வகையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அண்ணா உருவாக்கிய திமுக இயக்கத்தின் பவள விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். திமுகவின் பவள விழாவை நாம் நடத்துவது நமக்கு கிடைத்த பெருமை. வான் மழை வாழ்த்தில் உருவான திமுக தற்போது வையகம், பாராட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளது. அண்ணாவின் பாதையில் இம்மியளவும் விலகாமல் திமுக அரசை நடத்துகிறோம். அண்ணா வழியில், தமிழ்நாட்டை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வளர்த்தார். திமுகவிற்கு கிடைத்துள்ள புகழ் மாலையில் அனைவருக்கும் பங்கு உள்ளது.

வீழ்ச்சியுற்ற தமிழ்நாட்டை எழுச்சி பெற வைக்க திமுகவை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் திமுகவின் பவளவிழாவை நடத்திக் கொண்டு இருக்கிறோம். இது திமுகவிற்கு கிடைத்த பெருமை, அண்ணாவிற்கு கிடைத்த பெருமை. 75வது ஆண்டுகளை கடந்துள்ள திமுக 100-வது ஆண்டை கடப்பதற்குள் மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்.

திமுக என்ற மூன்றெழுத்தில் உயிர் அடங்கியுள்ளது. திமுகவின் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி, கொள்கை கூட்டணி. சில கூட்டணி, தேர்தல் சமயத்தில் மட்டுமே இருக்கும். தேர்தல் முடிந்தால், கூட்டணி முடிந்துபோய் விடுகிறது. தமிழ்நாட்டில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்துதான், இந்தியா கூட்டணி கூட உருவானது. திமுக கூட்டணியில் மோதல் வராதா? பகையை வளர்க்க முடியாதா? என்று நினைக்கின்றனர். திமுக கூட்டணியில் பிளவை எப்போதும், எவராலும் ஏற்படுத்த முடியாது. பாசிசத்தை வீழ்த்தவே ஒன்றிணைந்து உள்ளோம். திமுக கூட்டணியில் மோதல் வராது. திமுக கூட்டணியில் விரிசல், ஏற்படுத்த அவதூறு பரப்பி சிலர் விஷம வேலைகளை செய்தனர். 

திமுகவின் அடிப்படை கொள்கைகள் சமுதாயத்தின் சீர்திருத்தமாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியம் இல்லாதது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலைக் கூட 7 கட்டங்களாக நடத்தி முடித்தனர். நாடாளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாத இவர்கள், ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி நடத்துவார்கள்?. இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லை. ஆனால், மத்திய அரசு ஒரே பாட்டையே பாடிக் கொண்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டுவந்து மாநில அதிகாரத்தை குறைக்கவே முயற்சி செய்கின்றனர். இந்த திட்டம், மாநிலங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.