அதிமுக விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து எந்த கடிதமும் வரவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியதாவது:
ஓ.பன்னீர்செல்வம் தனது அலுவலக உதவியாளர் மூலம் என்னுடைய தனிச்செயலாளரிடம் நேற்று முன்தினம் கடிதம் கொடுத்துள்ளார். அது பரிசீலனையில் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து எந்தவிதமான கடிதமும் கிடைக்கவில்லை. இது பரிசீலனையில்தான் உள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விருப்பு வெறுப்பில்லாமல் ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தில் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான் முடிவு. கல்யாணமே முடியவில்லை. அதற்குள்ளாக ஆண் குழந்தையா? பெண் குழந்தையா என கேட்கிறீர்கள்.
இன்னமும் ஆளுநரிடமிருந்து நீட் மசோதாவுக்கு சரியான பதிலில்லை என்ற பத்திரிகை செய்திதான் உள்ளது. சட்டமன்றத்தின் மரபுப்படி தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றப்படுவதை உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதுதான் சட்டப்பூர்வமாக விதி.
ஒப்புதல் அளிக்கவில்லையென்றால் மக்களை புறக்கணிக்கின்ற செயலாகத்தான் கருதுகிறேன். ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறோம் என்றார் அப்பாவு.








