ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கத்தால் கருத்துவேறுபாடு இல்லை: காங்கிரஸ்

ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யும் விஷயத்தில் கட்சிக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மாக்கான் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு…

ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யும் விஷயத்தில் கட்சிக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மாக்கான் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் திடீரென போர்கொடி தூக்கினார். தனக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் கடந்த ஆண்டு ஜூலையில் பதவி விலகினார்.

அப்போது, சச்சின் பைலட் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயல்வதாக கூறப்பட்டது. ஆனால், அந்த முயற்சி பலிக்கவில்லை. காங்கிரஸ் மேலிடத்தின் சார்பில் சச்சின் பைலட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை அடுத்து அசோக் கெலாட் ஆட்சிக்கு வந்த ஆபத்து நீங்கியது.

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பதவிகள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் மேலிடம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒரு ஆண்டு ஆனநிலையில் அதற்கான முயற்சிகள் ஏதும் மேலிடத்தால் மேற்கொள்ளப்படவில்லை. எனவே அதிருப்தியில் இருந்த   சச்சின் பைலட் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில்தான் இப்போது ராஜஸ்தான் மாநில விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  டெல்லியில் இருந்து வந்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் வேணுகோபால், அஜய் மாக்கான் ஆகியோர் 24ம் தேதி இரவு முதலமைச்சர் அசோக் கெலாட்டுடன் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

ஜெய்ப்பூரில் உள்ள மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோருடன் அஜய் மாக்கான், வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜய் மாக்கான், “ராஜஸ்தான் மாநில கட்சித் தலைவர்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அமைச்சரவை விரிவாக்கத்தைப் பொறுத்தவரை மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறியுள்ளனர். மீண்டும் 28ம் தேதி ஜெய்ப்பூர் வர உள்ளேன். அப்போது எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மாவட்ட, வட்டத் தலைவர்கள் நியமனங்கள் தொடர்பாக முடிவு எடுக்கப்பட உள்ளது,” என்று கூறினார்.
ராஜஸ்தான் அமைச்சரவையில் 21 அமைச்சர்கள் உள்ளனர். அமைச்சரவையில் 30 அமைச்சர்கள் வரை இடம் பெற முடியும். எனவே, விரைவில் மேலிடத்தின் ஒப்புதலுடன் ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.