300 கிலோ ஹெராயின் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆதிலிங்கத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.
லட்சத் தீவுகள் அருகே மினிகோய் தீவுக்கும் திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் பகுதிக்கும் இடையே போதை மருந்து கடத்தல்கும்பலின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் அப்பகுதியில் கடலோர காவல் படையினர் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடல் மற்றும் வான் வழியான கண்காணிப்பு பணியின்போது சந்தேகத்துக் கிடமான 3 படகுகளை மடக்கி பிடித்தனர்.
அவற்றில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் 301 பாக்கெட்டுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 1,000 தோட்டாக்கள், வெடிபொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
ஈரான் நாட்டின் சாப்ஹர் துறைமுகத்தில் இருந்து இந்த போதைப்பொருட்களும் ஆயுதங்களும் கடத்தி கொண்டு வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இலங்கையைச் சேர்ந்த எல்.இ.நந்தனா, எச்.கே.ஜி.பி. தாஸ் பிரிய, ஏ.ஹெச்.எஸ். குணசேகர, எஸ்.ஏ.சேனாரத், டி.ரணசிங்க, டி நிசங்க உள்ளிட்டோர் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம் நடிகை வரலட்சுமி உதவியாளராக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆதிலிங்கத்திற்கு சினிமா மற்றும் அரசியல் தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. லிங்கத்தின் உறவினர் பாலாஜி என்பவர் போதைப் பொருள் கடத்தலில் தொடர்பில் இருப்பதன் மூலமாக விளிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் கடத்திய கும்பலைச் சேர்ந்த குணசேகரன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது விசாரணையில் உறுதியானது.
குணசேகரன் பினாமியாக லிங்கம் செயல்பட்டு போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் மூலமாக வரும் பணத்தை கிரிப்டோ கரன்சியிலும் சினிமாவிலும் அரசியலிலும் முதலீடு செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தமிழ் சினிமாக்களில் பிரம்மாண்டமாக போடப்படும் செட்டுகளுக்கு பைனான்சியர்களுக்கு பண நிதி உதவி அளித்ததும் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் 10 இலங்கை தமிழர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு தேசிய குற்றப்புலனாய்வு முகமை அதிகாரிகளால் குற்றம் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
.
இதில் 14வது நபராக லிங்கம் என்கிற ஆதி லிங்கத்தை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடிகை வரலட்சுமி விசாரிக்க அழைப்பு விடுத்தாகவும், ஆனால் ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதாக நடிகை வரலட்சுமி தெரிவித்தாக செய்திகள் வெளியானது. ஆனால் தனக்கும் ஆதிலிஙகத்திற்கும் எந்த தொடர்பு இல்லை என்றும், விசாரணைக்கு வருமாறு எந்த அழைப்பும் வரவில்லை என்றும் நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார் .இதுதொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.அதில்,
என்னிடம் வேலை பார்த்த ஆதிலிங்கம் 5 ஆண்டுகளுக்கு முன்பே வேலையில் இருந்து நின்றுவிட்டார்.ஆதிலிங்கம் தொடர்பாக NIA அதிகாரிகள் எனது தாயாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு என்னை யாரும் அழைக்கவில்லை என நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.







