“மன்சூர் அலி கான் மீது நடவடிக்கை வேண்டாம்” – காவல்துறை விளக்கம் கேட்ட நிலையில் த்ரிஷா பதில்!

“நடிகர் மன்சூர் அலி கான் மீது நடவடிக்கை வேண்டாம்” என காவல்துறை விளக்கம் கேட்ட நிலையில் த்ரிஷா பதில் அளித்துள்ளார். நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து நடிகர் மன்சூர் அலிகான்…

“நடிகர் மன்சூர் அலி கான் மீது நடவடிக்கை வேண்டாம்” என காவல்துறை விளக்கம் கேட்ட நிலையில் த்ரிஷா பதில் அளித்துள்ளார்.

நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் பேச்சுக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் த்ரிஷா கண்டனம் தெரிவித்தார்.  இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதையடுத்து,  நடிகை,  நடிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகவும்,  நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில்,  நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது.  இதனைத் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீசார் IPC 509 – பெண்ணின் நாகரிகத்தை அவமதிக்கும் செயல் செய்தல்,  IPC 354(A) – பெண்ணின் நற்பெயருக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின் இந்த வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் ஆஜரானார்.  இதனைத் தொடர்ந்து “திரை நாயகி த்ரிஷாவே மன்னித்துவிடு”  என மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். இதற்கு,  நடிகை த்ரிஷா அவரது ட்வீட்டர் பக்கத்தில்  ‘தவறு செய்வது மனிதம்; மன்னிப்பது தெய்வ குணம்’ என்னும் பழமொழியை குறிப்பிட்டு மன்சூரை அலிகானை மன்னித்துவிட்டதாக மறைமுகமாக கூறினார்.

இந்த சூழலில் நடிகர் மன்சூர் அலிகான் மீதான வழக்கில் நடிகை த்ரிஷாவிடம் விசாரணை நடத்தி,  அவர் அளிக்கும் பதில்களின் அடிப்படையில்,  அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.  இது தொடர்பாக நடிகை த்ரிஷா தரப்பு விளக்கத்தை கேட்டு சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் த்ரிஷாவிற்கு இன்று கடிதம் அனுப்பி இருந்தனர்.  எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க நடிகை த்ரிஷாவிற்கு காவல்துறை அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா காவல்துறை அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார்.  நடிகர் மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டு விட்ட நிலையில் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என த்ரிஷா பதிலளித்துள்ளதார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.