2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அழைப்புவிடுத்துள்ளார். இன்று 8வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்றபின் அவர் இதனை தெரிவித்தார்.
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பின் நேற்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், இன்று ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பீகார் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார்.
பீகாரின் முதலமைச்சராக பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவு கட்சி எடுத்த முடிவு என்றும் தனிப்பட்ட முறையில் தாம் அந்த முடிவை மேற்கொள்ளவில்லை என்றும் கூறினார். பாஜக என்ன விமர்சனம் வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் அதைப்பற்றி தமக்கு கவலையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக 10 ஆண்டுகளுக்கு பின் 2024ம் ஆண்டும் ஆட்சியை பிடிப்பது சாத்தியமா எனக் கேள்வி எழுப்பிய நிதிஷ்குமார், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சிகளை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவீர்களா என்று கேட்டபோது, தமக்கு அந்த பதவியை நோக்கிய இலக்கு எதுவும் இல்லை என்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.







