லால் சிங் சத்தா திரைப்படத்திற்கு எதிராக வந்துள்ள ஹேஷ்டேக்குகள் கவலை அளிப்பதாக நடிகர் அமீர்கான் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியில் அமீர்கான், கரினா கபூர் நடித்துள்ள படம் லால் சிங் சத்தா. இந்த படம் நாளை வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. இதற்காக அமீர்கான் மற்றும் படக்குழுவினர் படத்தின் புரொமோஷன் வேலைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த படத்தை தமிழில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் வயோகாம் ஸ்டூடியோஸ் 18 ஆகியோர் இணைத்து வழங்குகின்றனர். இதற்கான நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.
இந்நிலையில் இந்த படத்திற்கும், நடிகர் அமீர்கானுக்கும் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இந்த படத்தை புறக்கணியுங்கள் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு நடிகர் அமீர்கான் 2015ம் ஆண்டு அளித்த பேட்டி காரணமாக சொல்லப்படுகிறது.
2015ம் ஆண்டு அமீர் கான் அளித்திருந்த பேட்டியில், அவரது மனைவி இந்நாட்டில் சகிப்புத் தன்மையின்மை அதிகரித்து வருவதால் வேறு நாட்டிற்கு செல்லலாமா என்று வருத்தத்துடன் கூறியதாகத் தெரிவித்திருந்தார். இது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பேட்டியை மேற்கோள் காட்டி லால் சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.
இதையடுத்து, பாய்காட் பாலிவுட், பாய்காட் அமீர் கான், பாய்காட் லால் சிங் சத்தா போன்ற ஹேஷ்டேக்குகள் தமக்கு மிகவும் கவலையை அளிக்கிறது என்றும், இதற்கு காரணம், ஏராளமானோரின் இதயங்கள் தமக்கு இந்தியா பிடிக்காது என்று நம்பிக் கொண்டிருக்கிறது என அமீர்கான் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது உண்மையில்லை என்றும், தாம் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன் என்றும் அமீர் கான் பதிவிட்டுள்ளார். மேலும், தமது படத்தை புறக்கணிக்காதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.








