“நிதிஷ்குமார் பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து பீகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்” – பிரசாந்த் கிஷோர்

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து, பீகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.  கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக்…

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து, பீகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்,  பிரதமர் மோடியின் கால்களில் விழப் போனார்.  அப்போது அவரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தினார்.  இந்த சம்பவத்தை குறிப்பிட்டு,  தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தற்போது நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பீகார் மாநிலம்,  பாகல்பூரில் நேற்று நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரசாந்த் கிஷோர் பேசியதாவது,  “கடந்த காலங்களில் நிதிஷ் குமாருடன் பணியாற்றிய நான் ஏன் இப்போது அவரை விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.  நான் அவருடன் இருந்த காலங்களில் அவர் வேறு மனிதராக இருந்தார்.  அந்தக் காலங்களில் அவர் சுயமரியாதையுடன் இருந்தார்.

ஒரு மாநிலத்தின் தலைவர் என்பவர் மாநிலத்தின் மக்களின் பெருமையாகத் திகழ்பவர். ஆனால் நிதிஷ் குமார் பிரதமர் மோடியின் கால்களைத் தொட்டு,  பீகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்.  நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு நிதிஷ் குமார் முக்கியப் பங்கு வகிக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்,  தனது செல்வாக்கை எவ்வாறு பயன்படுத்துகிறார்? மாநிலத்தின் நன்மைக்காக, தனது செல்வாக்கைப் பயன்படுத்தவில்லை.  2025 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக ஆதரவுடன் வெற்றி பெற்று, தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக பிரதமர் மோடியின் கால்களில் விழுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பிரஷாந்த் கிஷோர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.