நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ்

சோனியா காந்தி குறித்து தரக்குறைவாகப் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது. குடியரசுத் தலைவரை ராஷ்ட்ரபத்னி என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன்…

சோனியா காந்தி குறித்து தரக்குறைவாகப் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது.

குடியரசுத் தலைவரை ராஷ்ட்ரபத்னி என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர்கள் நிர்மலா சீதராமனும், பியூஷ் கோயலும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர்.

இதனால், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் பாஜக உறுப்பினர்களுக்கும் இடையே அவையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை சுட்டிக்காட்டி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக நிர்மலா சீதாரானும் பியூஷ் கோயலும் பேசிய பேச்சுக்களை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவையின் கண்ணியத்திற்கு விரோதமாகப் பேசிய நிர்மலா சீதாரானும் பியூஷ் கோயலும் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “ஆமாம், ராஷ்ட்ரபதியை பார்க்க உள்ளோம்; இல்லை இல்லை ராஷ்ட்ரபத்னி, அனைவருக்கும்” என தெரிவித்தார்.

அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. ஆதிர் ரஞ்சனின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், அதற்கு பதிலடியாக பாஜக தலைவர்கள் சிலருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.