உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அடுத்தமுறை பதக்கத்தின் நிறத்தை மாற்ற முயற்சி செய்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. இன்று நடந்த இறுதிப் போட்டியின் தொடக்கத்தில் நீரஜ் சற்று சொதப்பவே செய்தார். முதல் மூன்று முயற்சிகள் முடிவில் நீரஜ் நான்காம் இடத்தில் இருந்தார். ஆனால் நான்காவது முயற்சியில் அபாரமாக செயல்பட்டு 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். க்ரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கம் வெல்ல, நீரஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து போட்டி முடிந்ததும் பேசியுள்ள நீரஜ் சோப்ரா, “அமெரிக்காவின் சீதோசன நிலை சிறப்பாக இல்லை. காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. ஆனாலும், என் மீதான நம்பிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இறுதி முடிவுகளில் நான் திருப்தியடைகிறேன். நாட்டிற்காக பதக்கம் வென்றதை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
ஒலிம்பிக்ஸ் சாம்பியனாக இருப்பதால் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. மூன்றாவது முயற்சியின் போது கூட நம்பிக்கையுடன் தான் இருந்தேன். அதனால்தான் மீண்டு வந்து வெள்ளிப் பதக்கம் வெல்ல முடிந்தது. மிகவும் சிறப்பாக உணர்கிறேன். அடுத்தமுறை நிச்சயம் பதக்கத்தின் நிறத்தை மாற்ற முயற்சி செய்வேன். பார்ப்பதற்கு இது எளிதாக தெரியலாம். ஆனால், ஆண்டர்சன் மிகப்பெரிய உழைப்பைப் போட்டு 90 மீட்டரை தாண்டியிருக்கிறார். உலகின் முன்னணி வீரராக அற்புதமாக ஈட்டி எறிந்து 90 மீட்டருக்கு மேல் இருமுறை கடந்திருக்கிறார். ஆண்டர்சன் இவ்வளவு பெரிய கடின உழைப்பைப் போட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்படி ஒரு போட்டியாளர் இருந்தது, என்னுடைய நலனுக்கும் சிறப்பான விஷயம். காமன்வெல்த் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-ம.பவித்ரா








