நாடு முழுவதும் அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய கட்டண விதிமுறைகளின்படி, ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக ரீதியிலான யு.பி.ஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை வணிகக் கட்டணம் (எம்.டி.ஆர்) விதிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதை எதிர்த்துத் அஞ்சன் தத்தா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நூதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, அக்டோபர் 15ம் தேதி நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேவேளையில், மத்திய அரசிடம் கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம்,
அரசாங்கம் அல்லது என்.பி.சி.ஐ விதிக்கும் இந்த எம்.டி.ஆர் கட்டணத்தின் சட்டப்பூர்வத் தன்மை என்ன? இது வரியா அல்லது சேவைக்கான கட்டணமா? நிர்வாக அமைப்புகள் சட்டப்பூர்வ வழிகாட்டுதல்கள் இல்லாமல் இத்தகைய கட்டணங்களை எவ்வாறு நிர்ணயிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பியது.
மேலும், எந்த அடிப்படையில் ரூ.2,000 எல்லை மற்றும் 0.4% கட்டணம் தீர்மானிக்கப்பட்டது? என்பது தொடர்பான தரவுகளையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டது. மேலும், சாதாரண தனிநபர் பரிவர்த்தனைகள் , ரூ.2,000 வரையிலான வர்த்தகப் பரிவர்த்தனைகள் மற்றும் மாதம் ரூ.1 லட்சம் வரை UPI மூலம் பெறும் சிறு வணிகர்களுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது என்றும், இக்கட்டணத்தை வணிகர்கள் வாடிக்கையாளர்கள் மீது சுமத்தக் கூடாது என்றும் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், எந்தவிதப் பொதுக் கலந்தாய்வும் இன்றி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணை குறித்து மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் என்பிசிஐ ஆகியவை 4 வாரங்களுக்குள் விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.




