இபிஎஸ் மீதான நெடுஞ்சாலை துறை முறைகேடு புகாரில் புதிய விசாரணை: உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல்!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை முறைகேடு புகார் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.  முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் …

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை முறைகேடு புகார் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. 
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில்  4
ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு
புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்
நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு
மாற்றியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது,
இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டுமென ஆர்.எஸ்.பாரதி தரப்பில்
கோரப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், எடப்பாடி பழனிச்சாமி மீது  குற்றமில்லை என கடந்த 2018ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை  விஜிலென்ஸ் ஆணையர் ஏற்கவில்லை என்றும்,  மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை படிக்காமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும், அதனால் 2018ம் ஆண்டு ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின்  அடிப்படையில் இந்த வழக்கை முடிக்க வேண்டும் எனவும், திரும்பப் பெற அனுமதிக்க  கூடாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 13ம் தேதிக்கு தள்ளி  வைத்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.