கட்டுரைகள்

முதலமைச்சரை வாழ்த்து மழையில் நனைய வைத்த நெட்டிசன்கள்


ஆர்.கே.மணிகண்டன்

கட்டுரையாளர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திருமண நாள் வாழ்த்து, இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி, ஸ்டாலின் – துர்கா திருமணம், சென்னை அண்ணா சாலையில் உள்ள உம்மிடி பத்மாவதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போதைய திமுக பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான நெடுஞ்செழியன் தலைமையில், கட்சியின் பொருளாளரும் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான க.அன்பழகன் முன்னிலையில், ஸ்டாலினின் திருமணம் நடைபெற்றது. அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ரூதின் அலி நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

திருமணமான அடுத்த 5 மாதத்தில், முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது. மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டார் மு.க.ஸ்டாலின். அவர் எந்த சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூட, ஆரம்பத்தில் அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும், துர்கா ஸ்டாலின் தளர்ந்துவிடவில்லை. அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன், ஒரு நோட்டுப் புத்தகம் முழுக்க ஸ்ரீராமஜெயம் எழுதியபடி, கிருஷ்ணர் கோயிலுக்கு தினமும் சென்று கண்ணீர் மல்க வேண்டியிருக்கிறார், தீவிர கடவுள் பக்தி கொண்ட துர்கா ஸ்டாலின்.

ஆம். பகுத்தறிவு பாசறையில் வந்த மு.க.ஸ்டாலின், மனைவியின் கடவுள் வழிபாட்டுக்கு ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை, துர்கா ஸ்டாலினே “அவரும் நானும்” என்ற தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசியல் தலைவரின் குடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளையும், நெகிழ்ச்சியான தருணங்களையும், இப்புத்தகத்தில் அழகுற விவரித்திருக்கிறார் துர்கா ஸ்டாலின். கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி, இதன் வெளியீட்டு விழாவில் பேசிய துர்கா ஸ்டாலின், தனது ஆசை, கனவு, லட்சியங்களை நிறைவேற்றுவதில், தன் கணவரின் பங்கு அளப்பரியது என்றும், அவரின் அரசியல் பயணத்தில் எப்போதும் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருப்பேன், என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதுபோல், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…” என்று கூறி, மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற போது, துர்கா ஸ்டாலினுக்கு உணர்ச்சிப்பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. இது நேரிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்தவர்களை நெகிழச் செய்தது.

இப்படி ஆதர்ஷ தம்பதியாக விளங்கும் ஸ்டாலின் – துர்கா தம்பதிக்கு, மகள் செந்தாமரை மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலினின் குழந்தைகளுடன் விளையாடுவது, மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

திமுக இளைஞரணி செயலாளர், மேயர், சட்டமன்ற உறுப்பினர், கட்சியின் பொருளாளர், அமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர் என படிப்படியாக அரசியலில் உயர்ந்துள்ளார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை மட்டுமின்றி, அவரது திருமணநாளையும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்து மழையில் நனையச் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

Advertisement:
SHARE

Related posts

நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றம்; கடந்து வந்த பாதை

Ezhilarasan

அர்ச்சகர்களும் தமிழ்நாடும்.. வரலாறு கூறுவது என்ன??

Saravana Kumar

தி ரைசிங் சன்

Halley karthi