நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா 516ஆவது தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டுதோறும் இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனிப் பெருந்திருவிழா கடந்த…

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா 516ஆவது தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனிப் பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, நாள்தோறும் நெல்லையப்பர் – காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. கற்பக விருட்ச வாகனம், வெள்ளிக்கமலம், தங்க பூதம், இந்திர விமானம், சிம்மம், பல்லக்கு, வெள்ளி காமதேனு வாகனங்களில் சுவாமி – அம்பாள் மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி அருள்பாலித்து வந்தனர்.

சுவாமி நடராஜப் பெருமான் வெள்ளை சாத்தி எழுந்தருளி உள் பிரகாரத்தில் வீதியுலா வந்தார். தொடர்ந்து, பச்சை சாத்தி எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார். மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதியுலா நடைபெற்றது. நெல்லையப்பர் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் நகர்வலம் வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்மன் தேருக்கு எழுந்தருளினர். காலை 9 மணிக்கு மேல் சுவாமி திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ஆட்சியர் விஷ்ணு, எம்எல்ஏக்கள் மு.அப்துல் வஹாப், நயினார் நாகேந்திரன், மேயர் பிஎம் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு உள்ளிட்டோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமியை வழிபட்டனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.