வயதுவந்தோருக்கான கல்வி கற்கும் முறையிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம்
புகுத்தப்பட்டு புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்
துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித்
திட்டத்தின்கீழ் அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும்
தன்னார்வலர்களுக்கான பயிற்சிப் பணிமனை தொடக்க விழா விருதுநகர் அருகே
ஆமத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புத் திட்டத்தில் கல்வி பயின்ற வயதுவந்தோருக்கு சான்றிதழை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் கல்வியும் சுகாதாரமும் இரு கண்களாக எண்ணிப் பணியாற்றி வருகிறோம். பள்ளி கல்வித் துறைக்கு ரூ.36,895 கோடியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். 1901ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 100 பேருக்கு 5 பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் கடந்த 2011ல் நடந்த கணக்கெடுப்பில் 74 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 80.33 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். 15 வயதிற்கு மேல்
பள்ளி செல்ல முடியாத நபர்களுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக
செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு கல்வி
பயிற்றுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 3.19 லட்சம் பேருக்கு பயிற்சி
அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு 4.80 லட்சம் நபர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.9.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் முறையை புகுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தமிழ்நாட்டில், வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் ராமநாதபுரம் மற்றும்
விருதுநகர் மாவட்டங்களில் (Aspirational Districts) சிறப்பு எழுத்தறிவுத்
திட்டம் தமிழக அரசின் 100 சதவிகித பங்களிப்பின்கீழ் ரூ.6.23 கோடி
மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட கற்போர் இலக்கு 1
லட்சத்து 748 பேரில், முதற்கட்டமாக 25,015 பேரும், 2ம் கட்டமாக 45.792 பேரும்
தங்களின் அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை முடித்துள்ளனர். 3ம் கட்டமாக 29,941
கற்போருக்கு 749 மையங்களில் தன்னார்வலர்களின் உதவியுடன் கற்பித்தல் மற்றும்
கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின்கீழ் 2ம் கட்ட அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை முடித்த வயது வந்தோருக்கு அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்கி. 3ம் கட்ட திட்டத் தன்னார்வலர்களுக்கான பயிற்சி தொடக்கவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் அமுதவல்லி பள்ளி சாரா
மற்றும் வயதுவந்தோர் கல்வித் திட்ட இயக்குநர் குப்புசாமி தென்காசி எம்பி தனுஷ் எம்.குமார், எம் எல் ஏக்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா, துணை மேயர் விஷ்ணு பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.








