இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, அவர் செய்த சிறப்பான பணிகளால் தான் நினைவுகூரப்படுகிறாரே தவிர, வெறும் அவரது பெயரால் அல்ல என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தெரிவித்தார்.
டெல்லியின் தீன் மூர்த்தி பவன் கட்டடத்தில் இயங்கி வரும் இந்த அருங்காட்சியகக் கட்டடத்தில் தான் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தங்கியிருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அந்தக் கட்டடத்தில் நூலகமும், இந்திய விடுதலைப் போராட்டம் மற்றும் இந்திய வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பை உணர்த்தும் வகையில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டது.
டெல்லியின் தீன் மூர்த்தி வளாகத்தில் உள்ள இந்த நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (NMML) தற்போது அதிகாரப்பூர்வமாக பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 14ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
அண்மையில், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் துணைத் தலைவரான பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், அதன் பழைய பெயரான நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் பெயரை பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என மாற்ற முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் லடாக் செல்லும் வழியில், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியிடம், நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், ”இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, அவர் செய்த சிறப்பான பணிகளால்தான் நினைவுகூரப்படுகிறாரே தவிர, வெறும் அவரது பெயரால் அல்ல என்று கூறினார்.







