நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், நீட் தேர்வு குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS, சித்தா, யுனானி,
ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர NEET – UG தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். நடப்பு 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. அகில இந்திய அளவில் 17,64,571 பேர் தேர்வை எழுதியதில் 9,93,069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1,32,167 பேர் தேர்வு எழுதியதில் 67,787 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 1,22,995 மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் தேர்ச்சி சதவிகிதம் அதிகமாக இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. 2020-ல் 57.44%, 2021-ல் 54.40% என்று இருந்த தேர்ச்சி விகிதம் 2022-ல் 51.30% ஆக குறைந்துள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள 91,927
MBBS இடங்கள், 27,698 BDS இடங்கள், 52,720 ஆயுஷ் இடங்கள், 603 B.V.Sc., & AH
இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 70 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 10,425 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 757 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்ட பின், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 4,293 இடங்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம்
நேரடியாக கலந்தாய்வை நடத்த உள்ளது.
எதிர்பார்க்கப்படும் கட் – ஆப்:- நீட் தேர்வு முடிவுகளில் பெரியளவில் மாற்றம் இல்லாததாலும், கூடுதலாக மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்படாததாலுல், இந்த ஆண்டுக்கான கட் – ஆப்-ல் பெரியளவில் மாற்றமில்லை.
கட் – ஆப் விவரம் – அரசு மருத்துவக் கல்லூரிகள்:
1. OC : 580 – 590
2. BC : 535 – 545
3. MBC : 505 – 515
4. BCM : 515 – 520
5. SC : 426 – 435
6. SCA : 360 – 370
7. ST : 315 – 325
மேற்கண்ட நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு
வாரியாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
கட் – ஆப் விவரம் – சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு
இடங்கள்:
1. OC : 520 – 525
2. BC : 493 – 498
3. MBC : 470 – 475
4. BCM : 481 – 488
5. SC : 380 – 385
6. SCA : 300+
7. ST : 280+
மேற்கண்ட நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், இட ஒதுக்கீடு வாரியாக
மாணவர்களுக்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள்
ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. எஞ்சிய நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில், அதிகளவிலான கட்டணம் செலுத்தி சேருவதற்கு, பொதுப் பிரிவினர் நீட் தேர்வில் 117 மதிப்பெண்கள் எடுத்தும், இதர பிரிவினர் 93 மதிப்பெண்கள் எடுத்தும் தேர்ச்சி பெற்றாலே போதுமானது
ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1,22,995 பேர் நீட்
தேர்வில் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளதால், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர
கடும் போட்டி நிலவும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மருத்துவக் கல்வி இயக்குநரகம் தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட உடன், முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும், தொடர்ந்து மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடைபெறும்.
-ம.பவித்ரா









