நீட் தேர்வு வினாத்தாள் கசிவா?.. தேசிய தேர்வு முகமை விளக்கம்!

நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில்,  தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அதற்கு விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ்,  பிடிஎஸ்,  பிஎஸ்எம்எஸ்,  பிஏஎம்எஸ்,  பியுஎம்எஸ், ஹோமியோபதி உட்பட இளங்கலை மற்றும் முதுகலை…

நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில்,  தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அதற்கு விளக்கமளித்துள்ளது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ்,  பிடிஎஸ்,  பிஎஸ்எம்எஸ்,  பிஏஎம்எஸ்,  பியுஎம்எஸ், ஹோமியோபதி உட்பட இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கும் தேசிய அளவில் நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், கலந்தாய்வின்போது மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும்.  இந்த நிலையில்,  இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.  இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து சுமார் 24 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 216 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்ததாக தகவல்கள் வெளியாகின.  இதில் 12 ஆயிரத்து 730 அரசு பள்ளி மாணவ-மாணவிகள்.  இந்த நிலையில், நீட் தோ்வு நடைபெறுவதற்கு முன்பாக, சமூக ஊடகங்களில் நீட் வினாத் தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை கூறியதாவது:

“ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு தோ்வு மையத்தில் ஹிந்தி மொழித் தோ்வா்களுக்கு தோ்வு மைய அதிகாரி தவறுதலாக ஆங்கில மொழி கேள்வித் தாளை விநியோகம் செய்துள்ளாா்.  இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சில மாணவா்கள், தோ்வு மையத்திலிருந்து விதிகளை மீறி அந்த வினாத்தாளுடன் வெளியேறி வினாத்தாளை புகைப்படம் எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனா்.  ஆனால்,  அதற்குள்ளாக மற்ற மையங்களில் நீட் தோ்வு தொடங்கிவிட்டது” என தெரிவிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.