ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணியின் எவின் லூயிஸ், ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை சிஎஸ்கே அணியுடன் வெளிப்படுத்தி இருந்ததால், இந்தப் போட்டியிலும் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜெய்ஸ்வால் 12 ரன்னிலும், லூயிஸ் 24 ரன்களிலும் வெளியேறி ஏமாற்றமளித்தனர். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் (3), சிவம் துபே (3)., பிலிப்ஸ் (4), டேவிட் மில்லர் (15), திவாட்டியா (12) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களில் சுருண்டது.

ராஜஸ்தான் அணியில் ஒருவர் கூட 25 ரன்களை தாண்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மும்பை அணியில் நாதன் கோல்டர்நைல் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
அந்த அணி 8.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் 13 ரன்களிலும் ஹர்திக் பாண்ட்யா 5 ரன்களிலும் வெளியேற, இஷான் கிஷன் 25 பந்துகளில் அரை சதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதே போல அடுத்தப் போட்டியிலும் மும்பை அணி அபார வெற்றி பெற்றால், பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பிருக்கிறது. ராஜஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி இருக்கிறது.







