நீலம் ப்ரொடக்சன் தயாரிப்பில் தினேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு தண்டகாரண்யம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார்.
தமிழ் திரைத்துறையின் முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித், தனது “நீலம்” தயாரிப்பு நிறுவனம் மூலம் புதிய இக்குனர்களை அறிமுகம் செய்து வருகிறார். இதுவரை “நீலம்” தயாரிப்பு நிறுவனம் மூலம் ஐந்திற்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். இவர் தற்போது “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தையும் தனது தயாரிப்பு நிறுவன பெயரிலே தயாரித்திருந்தார்.

இந்நிலையில் தான் இவர் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியுள்ளது. தண்டகாரண்யம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தினேஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு திரைப்படத்தை இயக்கிய அதியன் ஆதிரை இயக்குகிறார். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படமும் “நீலம்” தயாரிப்பில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் பெயரிடப்படாத ஒரு படத்தைத் தயாரித்து வரும் ரஞ்சித், அப்படத்தை அறிமுக இயக்குநராக ஜெய் என்பவரை அறிமுகம் செய்கிறார். ரஞ்சித் இயக்கிய “சார்பட்டா பரம்பரை” படத்தின் இணை எழுத்தாளரான தமிழ்ப்பிரபா இப்படத்திற்கும் இணை எழுத்தாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் கதைக் களம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு நகரும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிருத்வி, திவ்யா துரைசாமி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கின்றார். “நீலம்” தயாரிப்பு நிறுவனத்தின் முந்திய திரைப்படங்களைப் போலவே இப்படமும் சமூக பிரச்சனையை விவாதிக்கும் எனக் கூறப்படுகிறது.






