தேசிய தலைநகர் டெல்லியில் தீவிரமடைந்து வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து, விவசாயிகளுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் பிரபலங்கள் குரலெழுப்பியுள்ள நிலையில், தற்போது மாநிலங்களவையில் புதிய வேளாண் சட்டம் குறித்தும், விவசாயிகளின் போராட்டங்கள் குறித்தும் 15 மணி நேரம் விவாதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க மறுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதத்திற்கு பின்னர் இன்று, புதிய வேளாண் மசோதா குறித்து விவாதம் நடைபெறும் என அவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு மாநிலங்களவையில் கேள்வி நேரம் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 16 எதிர்க்கட்சிகள் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து 5 மணி நேரம் விவாதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது 15 நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் எம்.பி குலாம் நபி ஆசாத் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.







