பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கியின் புதிய சொகுசு பங்களாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் பேட்டை திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக்கி. ஆரம்பத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக பாலிவுட் உலகில் கால் எடுத்து வைத்த நவாசுதீன் சித்திக்கி, தனது கடின உழைப்பாலும் சிறந்த நடிப்பாற்றலாலும் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் மும்பையிலுள்ள தனது சொகுசு பங்களாவிற்கு குடிபெயர்ந்தார்.
இதுகுறித்து “பாம்பே டைம்ஸ்” நாளிதளுக்குப் பேட்டியளித்த அவர், “நடிக்க வரும் ஆரம்பக் காலத்தில் நான் தங்கியிருந்த வீடு இப்பொழுது இருக்கும் என் வீட்டின் குளியலறை அளவில்தான் இருக்கும். அவ்வளவு சிறிய வீட்டில் என்னுடன் சேர்த்து 4 பேர் தங்கியிருந்தோம். வீட்டின் கதவைத் திறந்தால் கூட மற்றவரின் காலில் இடிக்கும் அளவிற்கு சிறிய வீடு அது. வாழ்க்கை இப்படி மாறும் என்று நினைத்தது கூட இல்லை” என்று தனது கடந்த கால நினைவுகளை நினைவு கூர்ந்தார். மேலும் வீட்டின் முகப்பில் அவர் உட்கார்ந்திருப்பது போல் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேங்ஸ் ஆப் வசேப்பூர், சேக்ரட் கேம்ஸ் வெப் சீரீஸ் , சீரியஸ் மென் போன்ற திரைப்படங்களில் இவரது தனித்துவ நடிப்புக்காகப் பெறும் பாராட்டுகளைக் குவித்தார். மேலும் சீரியஸ் மென் திரைப்படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான விருதுக்கு சர்வதேச எம்மி விருதுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








