டெல்லியில் இன்று நடைபெறும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி புறப்பட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் துவங்கிவிட்டன. தேர்தலில் பாஜகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து பீகார் மாநிலம் பாட்னாவில் முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்திய நிலையில் அடுத்த கூட்டம் நேற்றும் இன்றும் பெங்களூரில் நடைபெறுகிறது.
இதனிடையே 3-வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரமாக உள்ளது. அதற்காக கூட்டணியை பலப்படுத்துவதுடன், புதிய கட்சிகளை இணைத்து கூட்டணியை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு ஹோட்டல் அசோகாவில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று கலந்து கொள்கிறார். இதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்கின்றன.
அதேவேளையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லி கூட்டத்துக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






