பென் ஸ்டோக்ஸ் ஓய்வு அறிவிப்பு: சரியான முடிவில்லை – நாசர் ஹுசைன் கருத்து

ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து 31 வயதிலேயே பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவது சரியான முடிவில்லை என முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் 83 டெஸ்ட் போட்டிகள், 105 ஒருநாள்…

ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து 31 வயதிலேயே பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவது சரியான முடிவில்லை என முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் கருத்து தெரிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் 83 டெஸ்ட் போட்டிகள், 105 ஒருநாள் போட்டிகள், 34 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மூன்று வகையான போட்டிகளிலும் பங்கேற்பது மிகவும் கடினமாக இருப்பதால் தான் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பென் ஸ்டோக்ஸின் இந்த முடிவு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நாசன் ஹுசைன் கூறியுள்ளதாவது: பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கக்கூடியது. கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து இருப்பதால்தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தொடர்ந்து விளையாடினால் வீரர்களுக்கு பைத்தியம்தான் பிடிக்கும். ஐசிசி உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் என தொடர்ந்து போட்டிகளை நடத்தி வருகிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் அவர்களின் லாபத்திற்காக கிரிக்கெட் போட்டிகளை நடத்துகின்றன.

இதுபோல அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடினால், என்னால் முடியாது என்று சொல்லிவிட்டு வீரர்கள் சென்றுவிடுவார்கள். பென் ஸ்டோக்ஸுக்கு 31 வயது தான் ஆகிறது. அதற்குள் ஒரு நாள் போட்டியில் விளையாட மாட்டேன் என்று கூறியுள்ளார். இது சரியான முடிவு கிடையாது. இதற்கு காரணமான கிரிக்கெட் அட்டவணையை நாம் சரி செய்ய வேண்டும். இப்போது இருக்கும் அட்டவணை ஒரு நகைச்சுவையாகத்தான் தோன்றுகிறது. அனைவரும் டெஸ்ட் போட்டி, டி20 கிரிக்கெட் போட்டிகளை விரும்பி பார்க்கிறார்கள். இப்போது ஒரு நாள் போட்டியின் எதிர்காலம் தான் ஆபத்தில் இருக்கிறது. எனவே, ஐசிசி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து அட்டவணையை சரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அட்டவணையை ஐசிசி தற்போது தயாரித்துள்ளது. இதில் ஐபிஎல் தொடர் உள்ளிட்ட மற்ற நாடுகள் நடத்தும் தொடர்களுக்கு அட்டவணையில் ஐசிசி இடம் வழங்கியிருக்கிறது. இதனால் கிடைக்கும் நேரத்தில் தான் மற்ற தொடர்களை நடத்த முடியும் என்பதால் அது வீரர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற செயலால் பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் இருந்து வெளியேற நேரிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.