காதலுக்கு தூதவனாக மட்டுமல்ல, காதல் தோல்வியால் வாடுபவர்களுக்கு தெம்பூட்டும் குரலாக வலம் வந்து கொண்டிருக்கிறார் பின்னணி பாடகர் நரேஷ் ஐயர். அவர் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சிலரது செயல் அவர்களது பெயருக்கு அர்த்தம் தரும். அப்படி ஒருவர்தான், தனது குரலால் மனித மனங்களை ஆளும் பின்னணி பாடகர் நரேஷ் ஐயர். திரைப்படத்துறையில் அறிமுகமான முதலாம் ஆண்டிலேயே அவரது குரலுக்கு தேசிய விருது வழங்கி அலங்கரங்கரிக்கப்பட்டதே அதற்கு சான்று.
மும்பையில் பிறந்த நரேஷ் ஐயருக்கு சிறுவயதில் இருந்தே கர்நாட இசையில் ஆர்வம் தொற்றிக் கொண்டது. கல்லூரியில் படிக்கும்போது தனது திறமையை வெளிக்காட்ட தனியார் நிகழ்ச்சி நடத்திய பாட்டுப் போட்டி, நரேசுக்கு ஓர் களமாக அமைந்தது. அதில் அவர் தோல்வி அடைந்தாலும், அந்தத் தோல்வி தனது வெற்றிப் பயணத்திற்கான பிள்ளையார் சுழி என்று அப்போது அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நரேஷின் குரலில் இருந்த தனித்துவத்தை அடையாளம் கண்ட ஏ.ஆர்.ரகுமான், அவருக்கு, தான் இசை அமைக்கும் புதிய படம் ஒன்றில் பாட வாய்ப்பளித்தார். அந்த வாய்ப்பெனும் மாமணியை சரியாக பயன்படுத்திக் கொண்ட நரேஷ், திரைத்துறையில் அறிமுகமாகன சில மாதங்களிலேயே தனது பெயரை பசுமரத்தாணியாய் பின்னணி பாடகர் பட்டியலில் பதித்தார் கொண்டார்.
2006-ல் வெளியான “ரூபாரூ” திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ரங் தே பசந்தி என்ற பாடலை நரேஷ் பாடியிருந்தார். அந்த பாடலுக்காக அந்த ஆண்டின் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது, நரஷை அலங்கரித்தது என்று சொல்வதைவிட நரேசின் குரலை அலங்காரம் செய்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
கர்நாடக இசையும் இந்துஸ்தானி இசையும் கற்ற நரேஷ், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார். தமிழில் நரேஷ் பாடிய முதல் பாடலே, தென்றலாய் பட்டும்படாமல் மயிலிறகு வருடுவதாய் அமைந்தது. ஆம்… அன்பே ஆருயிரே படத்தில் இடம்பெற்ற கவிஞர் வாலியின் வரிகளுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையில் மென்மையாய் வலு சேர்த்திருப்பார் நரேஷ்….
இன்றும் இளைஞர்கள் வாயில் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் பாடல் முன்பே வா… என் அன்பே. இப்பாடலை பாடியது நரேஷ் என்று சொன்னால், இத்தருணத்தில் பலரும் என்னது இந்த பாடலை நரேஷ் பாடினாரா என்று அயர்ந்திருப்பீர்கள்… அதேபோல், வாரணம் ஆயிரம் படத்தில் அவர் பாடிய பாடல் இன்றும் சத்தமில்லாமல் பலரின் காதலுக்கு தூதுபாடலாக அனுப்பப்படுகிறது. காதலுக்கு தூதவனாக மட்டுமல்ல, காதல் தோல்வியால் வாடுபவர்களுக்கு தெம்பூட்டும் குரலாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நரேஷ்.
ஒரு பாடகன் கவிஞனின் வரியை பக்குவமாய் கையாளும் போதுதான் வெற்றி பெறுவான் என்பார்கள். அந்த வரிசையிலும் நரேஷ் பிடித்த இடத்திற்கு இப்பாடல் சான்று. 2006 ஆண்டு முதல் தேசிய விருது, பிலிம் ஃபேர் என பல்வேறு விருதுகளோடு தொடரும் நரேஷின் பயணம், இனி வரும் காலங்களிலும் அப்படியே தொடர வாழ்த்துவோம்.
- சரவணன், நியூஸ் 7 தமிழ், சென்னை.







