வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி | இலங்கை அதிபர் #AnuraKumaraDissanayakke!

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், மாலையிலேயே…

Narendra Modi, PMO India, Sri lanka, President, Anura Kumara Dissanayakke,

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, 55 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.44 விழுக்காடு வாக்குகளுடன் சஜித் பிரேமதாச இரண்டாம் இடம் பிடித்தார். மூன்றாவது இடத்தை ரணில் விக்ரமசிங்க, நான்காவது இடத்தை நமல் ராஜபக்சவும், 5வது இடத்தை தமிழர்களின் பொது வேட்பாளரான அரியநேந்திரன் பாக்கியசெல்வமும் பிடித்தனர்.

இதன்மூலம் இலங்கையின் 9-வது அதிபராக இன்று காலை 9 மணிக்கு அனுர குமார திசநாயக பதவியேற்கிறார். இந்நிலையில், இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுர குமார திசநாயகவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் தெரிவித்துள்ளதாவது ;

“அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். இந்தியாவின் அண்டை நாடுகளில் பாலிசி மற்றும் விஷன் சாகர் ஆகியவற்றில் இலங்கை சிறப்பு இடம் பெற்றுள்ளது. இந்திய மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக எமது பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், உங்களுடன் நெருக்கமாக பணியாற்றவும் ஆவலாக உள்ளேன்”

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரித்த பிரதமர் மோடிக்கு அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.