இந்தியாவின் 49-வது தலைமை நீதிபதியாக பதவியேற்க நீதிபதி யு.யு.லலித் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3-ம் தேதி யு.யு.லலித்தை சந்தித்து தனது பரிந்துரை கடிதத்தின் நகலை தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேரில் ஒப்படைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி உள்ளன. தற்போதைய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா உள்ளார்.
இவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 26ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் மத்திய சட்ட அமைச்சகம் களமிறங்கியது.
பதவி காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதியே, தனக்கு அடுத்து வரப்போகும் தலைமை நீதிபதி யார் என்பதை பரிந்துரை செய்வதே வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. அதன்படி, தனக்கு அடுத்து யார் பதவிக்கு வர வேண்டும் என்பதை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி. ரமணா பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடிதம் எழுதி இருந்தது.

அதைத் தொடர்ந்து ரமணா, லலித் பெயர் பரிந்துரைத்துள்ளார். தற்போது உச்சநீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதி லலித் தான். 1985ம் ஆண்டு டிசம்பர் வரை மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த லலித், அதற்கு அடுத்த ஆண்டு முதல் டெல்லி வந்தார்.
புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள யு.யு லலித்தின் பதவிக்காலம் 3 மாதத்திற்கு குறைவாகவே இருக்கும். ஏனெனில் வரும் நவம்பர் 8ஆம் தேதியுடன் யு.யு. லலித் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாகிய 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் யு.யு.லலித் செயல்பட்டுள்ளார்.