முக்கியச் செய்திகள் தமிழகம்

நாகர்கோவில் மாநகராட்சியை கைப்பற்றுகிறதா பாஜக? மேயர் பதவி கேட்டு காங்., போர்கொடி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் தனிப்பெரும்பான்மையில் திமுக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் நாகர்கோயில் மாநகராட்சியில் சில- பல காரணங்களால் இழுபறி நிலை நீடிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக செல்வாக்கு  சற்று அதிகம். கடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளும் மற்றும் முடிவுகளும் அவ்வாறே இருந்தன. 2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து இடங்களையும் அதிமுக கைப்பற்றிய நிலையில், தர்மபுரி தவிர்த்து கன்னியாகுமரி மக்களவை தொகுதியை கைப்பற்றினார் முன்னாள் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். தற்போது வெளியாகியிருக்கும் உள்ளாட்சி தேர்தல் முடிவிலும் கூட நாகர்கோவில் மாநகராட்சியில் திமுகவிற்கு அடுத்தபடியாக பாஜக தனித்து நின்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தமுள்ள 52 வார்டுகளில் திமுக 24 இடங்களையும் அதன் கூட்டணி கட்சிகளான காங் 07, மதிமுக 1 இடங்களையும் கைப்பற்றி மொத்தம் 30 இடங்களை பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது. பாஜக 11வார்டுகளிலும் அதிமுக 7 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. பாஜகவின் அதிருப்தி வேட்பாளர்களாக களமிறங்கிய 2 சுயேட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். ஏற்கனவே அதிமுகவுடன் இணக்கமான சூழலில் உள்ள பாஜக  மொத்தம் 20 உறுப்பினர்கள் ஆதரவை பெற்றுள்ளது.

போர்கொடி:

7 வார்டு உறுப்பினர்களை பெற்றுள்ள காங்கிரஸ் தங்களுக்கு மேயர் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜனின் சகோதரரும், முன்னாள் நாகர்கோவில் நகராட்சி துணை தலைவருமான சைமன் துணை மேயர் பதவியை அவரது மனைவிக்கு கேட்டு வரும் சூழலில், மேயர் தேர்வில் காங்கிரஸின் 7 வாக்குகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும் 4 மண்டலங்களை உள்ளடக்கிய நாகர்கோவில் மாநகராட்சி 2 மண்டல தலைவர்களை வழங்குகிறோம் எனவும் திமுக தரப்பில் கூறப்படுகிறது.

ஒரு மேயர் பதவியையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது பாஜக என்றும் அதற்கான பணிகளை முன்னாள் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.

மறைமுகதேர்தல்:

மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் மறைமுக தேர்தல் என்பதால் யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் கேட்கும் பதவி வழங்காத பட்சத்தில் அவர்கள் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பது தெரியாது. காங்கிரஸின் 7 உறுப்பினர்களின் ஆதரவு இங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும் காங்கிரஸ் உட்கட்சிக்குள் பல கோஷ்டி பூசலும் நிலவுகிறது என்கின்றனர்.நாகர்கோவிலில் முதல் முறையாக திமுக மேயர் பதவியை கைப்பற்றும் முயற்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை வைத்து காங்கிரஸ் உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

1 மதிமுக ஆதரவு மற்றும் 24 திமுக உறுப்பினர்களை சேர்த்து மொத்தம் 25 இடங்கள் உறுதியாகியுள்ள நிலையில், பாஜக அணியில் (பாஜக 11, அதிமுக 7, சுயேட்சைகள் 2) மொத்தம் 20 உறுப்பினர்கள் ஆதரவை பெற்றுள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் 7 வாக்குகளை பொறுத்தே நாகர்கோவில் மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகள் உள்ளன என்று அரசியல் பிரமுகர்களின் கருத்தாக பார்க்கப்படுகிறது.

ஆளுங்கட்சியும் அவர்களது தரப்பில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

– மா.நிருபன் சக்கரவர்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐடிஐ முடித்தவர்களுக்கு 10,12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடு

EZHILARASAN D

போதைக்காக சானிடைசர் குடித்த 2 பேர் உயிரிழப்பு!

G SaravanaKumar

தூங்கி விழுந்துகொண்டே வீட்டுப்பாடம் செய்யும் சுட்டி பையனின் வீடியோ வைரல்

Web Editor