இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம்: அமைச்சர் சேகர்பாபு

திமுக ஆட்சி காலம் இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய வரலாற்றில் இல்லாத வகையில் சிவராத்திரியை முன்னிட்டு தொடர்ந்து 12 மணி நேரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக…

திமுக ஆட்சி காலம் இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய வரலாற்றில் இல்லாத வகையில் சிவராத்திரியை முன்னிட்டு தொடர்ந்து 12 மணி நேரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக இந்துசமய  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் திருக்கோயில் மைதானத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதில், அறநிலையங்கள் துறைச்செயலாளர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன்,  எம்.எல்.ஏ., வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவருக்கும் வழிபாடுகளை சுதந்திரமாகவும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதையும், இறை சொத்து இறைவனுக்கே என்ற நிலையில் முதலமைச்சரின் ஆட்சி இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் என்ற வகையில் நிலங்கள் மீட்பு, திருப்பணிகள் நடத்தி கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையான கட்டமைப்பு வசதி, பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, மானியம் உயர்த்தி வழங்குதல் என பல நலத்திட்டங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. அனைத்து மதத்தினரும் போற்றத்தக்க வகையில் விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து பேசிய அவர், சிவனுக்கு உகந்த நாளான சிவராத்திரியாக கொண்டாடி வருகிறோம். இந்து சமய வரலாற்றில் இல்லாத வகையில் தொடர்ந்து 12 மணி நேரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. 40,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், திருக்கோயில் தலபுராணங்களை தெரிந்துகொள்ள புத்தகங்க்ள் விற்க ஸ்டால்கள் அமைக்கப்படும்.

மேலும், ஆன்மிக கலையரங்கமாக, ஆன்மிக பூமியாக இந்த இடம் காட்சி தரும். மீட்கப்பட்ட திருக்கோயில் நிலங்கள் அரசுத்துறையின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படும். மீட்கப்பட்ட இடங்களில் இந்து சமய அறநிலையத்துறையின் கற்கள் பதிக்கப்படும். கடந்த ஆண்டுகளை விட சிவன் ஆலயங்கள் விளக்குகளால் ஜொலிக்கும். எட்டுக் கால் பாய்ச்சலில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகின்றது. போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கவனத்திற்கு வருவதையும், வராததையும் செய்துகொண்டிருக்கிறோம். சிதம்பரம் திருக்கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செயல்பட்டு வருகின்றது. விரும்பத்தகாத தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. தவறுகள் எங்கிருந்தாலும் இன்னார், இனியவர் என முதலமைச்சர் பார்க்கமாட்டார்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.