நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ஒத்திவைப்பு!

நாகை- இலங்கை காங்கேசன்துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கவிருந்த நிலையில், திடீரென 12-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக…

நாகை- இலங்கை காங்கேசன்துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கவிருந்த நிலையில், திடீரென 12-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நாகை-இலங்கை இடையே நேற்று முன்தினம் பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கேப்டன் பிஜு ஜார்ஜ் தலைமையில் 14 ஊழியர்கள் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினர். மேலும் சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பல்வேறு கட்ட சோதனைகளை வெற்றிகரமாக முடித்தனர்.

இதேபோல் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பயணம் செய்ய வருவதற்காக சோதனைச்சாவடி, புக்கிங் சென்டர் உள்ளிட்டவைகளும் தயார் நிலையில் உள்ளது. 150 பேர் பயணம் செய்யும் இந்தக் கப்பலில் நாகையில் இருந்து இலங்கைக்கு செல்வதற்காக 30 பேரும், இலங்கையில் இருந்து நாகைக்கு வருவதற்காக 26 பேரும் டிக்கெட் புக்கிங் செய்துள்ளதாக கூறப்பட்டது.

இன்று முதல் பயணிகளுடன் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது பயணிகள் மற்றும் நாகை பொதுமக்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கான காரணம் எதையும் அதிகாரிகள் கூறவில்லை. ஆனால் நாகையில் இருந்து இலங்கை செல்ல பயணிகள் கட்டணம் அதிகம் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எம்ஜிகே நிஜாமுதீன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

”நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு செல்ல இந்திய அரசு கப்பல் போக்குவரத்தை தொடங்க உள்ளது. இலங்கை சென்று வர, 40 கிலோ உடமைகள் எடுத்துச்செல்ல அனுமதியுடன் பயணக் கட்டணம் ரூ.15 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் இருந்து இலங்கைக்கு ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் 42 கிலோ உடமையுடன் பயணம் செய்ய கட்டணம் உத்தேசமாக ரூ.14,500 மட்டுமே. எனவே, மத்திய அரசு நாகை – காங்கேசன் துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.