எதிர்கால வாழ்க்கைக்கு ஆங்கிலம்தான் முக்கியம் என்பது கட்டுக்கதை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
விஜயதசமியையொட்டி, மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது:
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் அறிவார்ந்த மற்றும் திறமையான பெண் விருந்தினர்களை வரவேற்கும் பாரம்பரியம் உள்ளது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் மற்றும் ராஷ்ட்ர சேவிகா சமிதி ஆகியவற்றால் ‘வியக்தி நிர்மான்’ என்ற ஷகா வழிமுறை தனித்தனியாக செயல்படுத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெறும் தசரா திருவிழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வது வழக்கம். இன்று புகழ்பெற்ற மலையேற்ற வீரர் சந்தோஷ் யாதவ் கலந்துகொண்டுள்ளார்.
இவர், கெளரிசங்கர் மலையை இரண்டு முறை ஏறியிருக்கிறார். மத அடிப்படையிலான மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு புறக்கணிக்கப்படக் கூடாத ஒரு முக்கியமான விஷயமாகும். மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகள் புவியியல் எல்லைகளில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். மக்கள்தொகை கொள்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
கொரோனாவுக்குப் பிறகு நமது பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பியது. உலக பொருளாதார நிபுணர்கள் நமது பொருளாதாரம் மேலும் வளரும் என்று கணித்திருக்கின்றனர். விளையாட்டுத் துறையிலும் நமது வீரர்கள் நாட்டை பெருமைப்படுத்தி வருகின்றனர்.
ஆங்கிலம் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்று என்பது கட்டுக்கதை. புதிய கல்விக் கொள்கை மாணவர்களை உயர் பண்பாட்டாளர்களாகவும், நல்ல மனிதர்களாகவும் மாற்றும். தேசப்பற்று கொண்டவர்களாகவும் திகழச் செய்யும். இதுதான் அனைவரும் விரும்புகிறோம் என்றார் மோகன் பாகவத்.
ஆர்எஸ்எஸ் தசரா நிகழ்ச்சியில் பெண் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும்.








