மத்திய உள்துறை அமைச்சரின் வருகையை முன்னிட்டு தன்னை வீட்டுச்சிறையில் வைத்துள்ளதாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடக்கு காஷ்மீரின் பாரமுல்லாவில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதனால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) தலைவருமான மெகபூபா முஃப்தி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து முஃப்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் காஷ்மீரைச் சுற்றி அமைதி நிலை திரும்பிவிட்டதாக தம்பட்டம் அடித்து வரும் நிலையில், ஒரு தொண்டரின் இல்லத் திருமண விழாவிற்குச் செல்ல விரும்பியதற்காக நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். ஒரு முன்னாள் முதலமைச்சரின் அடிப்படை உரிமைகளை இவ்வளவு எளிதாக நிறுத்திவிட முடியுமானால், ஒரு சாமானியனின் அவலநிலையை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீநகரின் குப்கர் சாலையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தின் கதவுகளுக்கு பூட்டு போடப்பட்டிருக்கும் புகைப்படத்தையும் அந்த பதிவோடு இணைத்துள்ளார்.
முஃப்தியின் ட்வீட்டுக்கு பதிலளித்த காவல்துறை, பட்டான் பகுதிக்குச் செல்ல எந்தவித் தடையும் அறிவிக்கப்படவில்லை என்றும், அவர் ட்வீட் செய்த படம், பங்களாவில் தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களின் சொந்த பூட்டைக்கொண்டு கேட்டின் உள்பகுதி பூட்டப்பட்டுள்ளது என்றும், அவர் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
காவல்துறை அறிக்கைக்கு பதிலளித்த முஃப்தி, “நான் பட்டானுக்கு செல்ல அனுமதி இல்லை என்று எஸ்.பி பாரமுல்லா நேற்று இரவு என்னிடம் கூறினார். இன்று காவல்துறை என் இல்லத்தின் கதவுகளை உள்ளே இருந்து பூட்டிவிட்டு, இப்போது பொய் சொல்கிறது. சட்ட அமலாக்க முகமைகள் வெட்கமின்றி தாங்கள் செய்த தவறுகளின் தடங்களை மறைக்க முயற்சிப்பது வருத்தமளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.








