மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் மனித உரிமை ஆர்வலருமான ஆங் சான் சூகியின் அரசு அகற்றப்பட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதை எதிர்த்து போராடிய மக்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பலர் கொல்லப்பட்டனர். ஆங் சான் சூகி உட்பட அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ராணுவம் சுமத்தியது.
ஆங் சான் சூகி மீது இராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியை தூண்டுதல், கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது உள்பட சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இதுகுறித்த தகவல்கள் ஊடகங்களுக்கோ, பார்வையாளர்களுக்கோ தெரிவிக்கப்படவில்லை. வழக்கறிஞர்கள் மட்டுமே இந்த வழக்கின் செய்திகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, மியான்மர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜாவ்மின் துன் வெளியிட்டுள்ளார். இதே போல் மியான்மர் முன்னாள் தலைவர் வின் மைன்ட்டிற்கும் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








