உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மருத்துவமனையில் தன் தாயைக் காப்பாற்ற ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என ஒருவர் போலீஸிடம் மண்டியிட்டுக் கதறி அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனா 2ம் அலை வேகமெடுத்துள்ளது. இதனால், நாட்டில் சில பகுதிகளில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மருத்துவமனைக்கு வெளியே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதை இளைஞர் காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. பதினாறு நொடி ஓடும் அந்த வீடியோவில், ஆக்ராவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் முன்பு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு பேர் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றை ஆம்புலன்ஸிற்கு எடுத்து செல்கின்றனர். பிபிஇ கிட் அணிந்த ஒருவர் சிலிண்டர்களை எடுத்து செல்லாதீர்கள். எனது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்து தரையில் மண்டியிட்டு கதறி அழுகிறார். இதையடுத்து அருகில் இருந்த ஒருவர் அவரை சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார்.
இந்த வீடியோ பெரும் வைரலானதையடுத்து, ஆக்ரா காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதற்கு விளக்கமளித்துள்ளார். அதில், ”ஆக்ராவில் கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாட்டைத் தீர்க்க மக்கள் அவர்களிடம் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைக்குக் கொடுத்து உதவி வருகின்றனர். மேலும் மருத்துவமனையிலிருந்து போலீசார் யாரும் ஆக்சிஜன் நிரம்பிய சிலிண்டர்களை எடுத்துச் செல்லவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோ மக்களை தவறாக வழிநடத்துகிறது. இதுபோன்று தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், அரசு ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை எனக் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.