இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில், 4 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பின்ச்சர், அரசின் துணைக் கொறடாவாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் மீது கடந்த காலங்களில் பல்வேறு பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் பதவியேற்ற பிறகும் கேளிக்கை விடுதியில் அதிக அளவு மனு அருந்தி விட்டு மீண்டும் பாலியல் புகாரில் சிக்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்ததும், துணை கொறடா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். மேலும் எம்.பி. பதவியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஜூலை 5-ம் தேதி பேசிய போரிஸ் ஜான்சன், கிறிஸ் பின்ச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தும், தான் அவரை கொறடாவாக நியமித்தது தவறு என்றும் அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் கூறினார்.
சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என போரிஸ் ஜான்சன் மீது எழுந்த குற்றச்சாட்டால், இங்கிலாந்து நிதி அமைச்சரும், இந்திய வம்சாவளியுமான ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான அமைச்சர் வில் குயின்ஸ், சட்டத்துறை அமைச்சர் லாரா டிராட் ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
மேலும் எதிர்க்கட்சியினரும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் என்பது தெரிந்தும், அதை மறைத்து அவருக்குப் பதவி கொடுத்திருப்பதால், விரைவில் தேர்தல் வர வேண்டும் என்றும் நம் நாட்டுக்கு புதிய அரசு வரவேண்டும் என்றம் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, பிரதமர் அலுவலகத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடியதாக போரிஸ் ஜான்சன் மீது சர்ச்சை எழுந்த நிலையில், ஒரே நேரத்தில் 4 முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்தது அவரது அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சொந்த கட்சியினரே அவருக்கு எதிராக திரும்பி இருப்பதால், போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கக்கூட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் எந்த சூழ்நிலையிலும் தான் பதவி விலக போவதில்லை என போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.
– இரா.நம்பிராஜன்