சுங்கச்சாவடிகளில் கட்டணக் குறைப்பு எப்போது? – நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் 40 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் மீண்டும் வலியுறுத்தினார். கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் மாநிலங்களவையில் திமுக…

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் 40 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் மீண்டும் வலியுறுத்தினார்.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒருமுறை சிறிய அளவிலான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

திமுக உறுப்பினர் வில்சனின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, சுங்கச் சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் 40 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும் என்ற  வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு வாகனப் பதிவின் பொழுதே சிறிய ஒரு முறைக் கட்டணமாக வசூலிப்பதை ஆவண செய்வது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். மேலும்,பொது நிதியளிப்பின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 40% கட்டணம் குறைக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர்  நிதின்கட்கரி, எனக்கு அளித்த வாக்குறுதியை மீண்டும் நினைவூட்டினேன் என குறிப்பிட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.