ஐபில் வரலாற்றில் அதிக விக்கெட்கள் – பிராவோவை பின்னுக்குத் தள்ளி புவனேஷ் குமார் சாதனை!

ஐ.பி.எல். வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளராக அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.

18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (ஏப்.7) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை  – பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பெங்களூரு அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 67 ரன்களும், ரஜத் படிதார் 64 ரன்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு தரப்பில் க்ருனால் பாண்ட்யா 4 விக்கெட், யாஷ் தயாள், ஹேசில்வுட் தலா 2 விக்கெட் மற்றும் புவனேஷ்வர் குமார் 1 விக்கெட் வீழ்த்தினர். 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம்  ஐ.பி.எல். வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளராக அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் (184 *விக்கெட்) படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்த பட்டியலில் பிராவோ 183 விக்கெட்களை வீழ்த்தி முதல் இடத்தில் இருந்தார். அவரது சாதனையை புவனேஷ்வர் குமார் முறியடித்துள்ளார்.

ஐ.பி.எல். வரலாற்றில்  அதிக விக்கெட் வீழ்த்திய Fast Bowlers :

  • புவனேஷ்வர் குமார் – 184 விக்கெட்
  • டுவைன் பிராவோ – 183 விக்கெட்
  • லசித் மலிங்கா – 170 விக்கெட்
  • ஜஸ்ப்ரீத் பும்ரா – 165 விக்கெட்
  • உமேஷ் யாதவ் – 144 விக்கெட்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.