நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமைவதை எம்.பி.க்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமைய திறந்த மனதுடன் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமானதாகும்.
நாம் 75ஆவது சுதந்திர தினத்தை அமிர்த பெரு விழாவாக கொண்டாடும் காலம். அடுத்த 25 ஆண்டுகளில் நாடு 100ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும். நமது பயணத்தை முடிவு செய்ய தீர்மானம் இயற்றப்பட வேண்டிய தருணம் இது.
திறந்த மனதுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்போம். தேவைப்பட்டால் விவாதமும் செய்வோம். நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமைவதை அனைத்து எம்.பி.க்களும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணை தலைவர் தேர்தல் காலம் என்பதால் மிகவும் முக்கியமான கூட்டத் தொடராக இதை நாம் கருத வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கியது என்றார் பிரதமர் மோடி.
இன்று தொடங்கிய மழைக் காலக் கூட்டத் தொடர்ந்து அடுத்த மாதம் 12 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அக்னீபாத் திட்டம், வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
குடும்ப நீதிமன்ற திருத்த மசோதா, வனப் பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்ற ஆளும் பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.








