இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் 130-வது பிறந்த நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர், அவரை நினைவு கூர்ந்துள்ளனர்.
நாடு முழுவதும் டாக்டர். பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகிய முக்கிய தலைவர்கள் அம்பேத்கரின் பிறந்த நாளன்று அவரை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டியுள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில்,
“பரத ரத்னா விருதுப் பெற்ற அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நான் அவருக்கு தலைவணங்குகிறேன். ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அவர் போராடியது ஒவ்வொரு தலைமுறையிக்கும் அது எடுத்துக்காட்டாக இருக்கும்.” எனத் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில்,
“சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட அம்பேத்கர் தன் வாழ்க்கை முழுவதும் போராடினார். அவர் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொண்ட பாடத்தை நம் வாழ்க்கையில் பயன்படுத்தி மாற்றம் அடைய வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்ததாவது, “நாட்டின் வளர்ச்சி பாதைக்காக பல கடினமான கேள்விகளை எழுப்பிய பாபாசாகிப் அம்பேத்கரை இன்று நாம் நினைவு கூருகிறோம்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டரில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கட்டமைப்பாளரும் சமூக நீதியை நிலைநாட்ட கொஞ்சமும் பயமும் தயக்கமும் காட்டாத அம்பெத்கரை நாம் இன்று நினைவு கூருகிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.







