ஆஸ்திரேலியாவில் கடந்த வியாழக்கிழமை ஆஸ்திரேலியா- இந்தியா உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய பிரதமர் மோடி 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர் ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையிலிருந்து இந்தியா பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து இந்தியாவிலும் பதின்ம வயதினருக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுமா…? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் தொடர்பாக எந்தவொரு முன்மொழிவையோ அல்லது சட்டத்தையோ மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை.
உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான நாடு தழுவிய சமூக ஊடகத் தடை கடந்த ஆண்டு டிசம்பரில் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின்படி, 16 வயதுக்குட்பட்ட பயனர்கள் கணக்குகளை உருவாக்குவதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடுப்பதற்கு, சமூக ஊடக நிறுவனங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொடர்ந்து மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தடை உள்ளது.




