திருச்சியில் ஆடு திருடர்களால் வெட்டி கொல்லப்பட்ட, சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் நிதியுதவிக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின், வழங்கினார்.
திருச்சி நவல்பட்டு அருகே, சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆடு திருடிய நபர்களை பிடிக்க முயன்ற பூமிநாதன், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பூமிநாதனின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், பூமிநாதனின் மனைவி கவிதா மற்றும் மகன் பிரசாத் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்தனர். அப்போது, ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை பூமிநாதனின் மனைவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பூமிநாதனின் மகன் பிரசாத், தனக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், பரிசீலிப்பதாக கூறியதாக தெரிவித்தார்.








