ஐக்கிய அரபு அமீரகத்தில் காணாமல்போன மால்டோவா நாட்டைச் சேர்ந்த இஸ்ரேல் குடியுரிமை பெற்ற யூத மத குரு பயங்கரவாத சம்பவத்தில் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மத குரு ஸ்வி கோகனின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க இஸ்ரேல் அனைத்து வழிகளிலும் பாடுபடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு ‘ஆபிரகாம்’ உடன்படிக்கையில் இரு நாடுகளுக்கும் ராஜீய உறவு தொடங்கியதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான இஸ்ரேலியர்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் தாக்குதலால் ஓராண்டுக்கும் மேல் தொடரும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியிலும் இந்த ஒப்பந்தம் நீடிக்கிறது. ஆனால், காஸாவில் பேரழிவை ஏற்படுத்திய இஸ்ரேலின் பதிலடி தாக்குதல், லெபனானை ஆக்கிரமித்து ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவுடன் பல மாதங்களாக மோதல் ஆகியவற்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மற்ற அரபு நாட்டவர்கள் மத்தியில் இஸ்ரேலியர்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், துபாயின் பரபரப்பான அல்-வாசல் சாலையில் யூதர்களுக்கான பிரத்யேக மளிகைக் கடை நடத்தி வந்த கோகன் கடந்த நவ. 21-ம் தேதி காணாமல் போனார். கோகன் காணாமல் போனது குறித்து நேற்று (நவ. 24) அதிகாலை செய்தி வெளியிட்ட ‘டபிள்யூ.ஏ.எம்.’ செய்தி நிறுவனம், அவர் இஸ்ரேல் நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அவரது இறப்பை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ள நிலையிலும், இந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
நியூயார்க் நகரைத் தளமாகக் கொண்டு செயல்படும் யூத மதத்தின் கவனிக்கத்தக்க கிளையான சாபாத் லுபாவிச் இயக்கத்தின் தூதராக கோகன் செயல்பட்டார். அமெரிக்க குடியுரிமை பெற்றவரான அவரது மனைவி ரிவ்கி, 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மத குரு கவ்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க்கின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.







