உண்ணாவிரத போராட்ட மேடையில் கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

நீட் தேர்வு விவகாரத்தால் உயிரிழந்த மாணவி அனிதாவின் காணொலியை பார்த்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரத மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு…

நீட் தேர்வு விவகாரத்தால் உயிரிழந்த மாணவி அனிதாவின் காணொலியை பார்த்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரத மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.

சமீபத்தில் நீட் தேர்வில் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த எதிர்ப்பை தீவிரம் ஆக்கி உள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழக ஆளுநரை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

திமுக இளைஞரணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தை, அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம்பி தயாநிதி மாறன், மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மதுரையை தவிர அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தின் போது தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் வாழ்க்கை பற்றிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதோடு மாணவி அனிதாவின் வீடியோவும், அனிதா கொடுத்த பேட்டியும் கூட காட்சிப்படுத்தப்பட்டது. இதை பார்த்ததும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையிலேயே உடைந்து கண்ணீர்விட்டு அழுதார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.